Tuesday, November 10, 2015

தீபாவளியும் அம்மாச்சியும்

தீபாவளினாலே முதல்ல ஞாபகத்துக்கு வரது அம்மாச்சிதான். 
இதென்னடா பொங்கல்-னாலும் அம்மாச்சிதான் தீபாவளினாலும் அம்மாச்சிதானா? அப்படின்னு கேட்குறது புரியுது. 
அதென்னமோ தெரியல.. எங்க வாழ்க்கையெல்லாம் அம்மாச்சிய சுத்தியே ஓடிட்டு இருக்கு. அவ்வளவு சுறுசுறுப்பான மனுஷி. 
மீண்டும் தீபாவளி.. இத்தனை வருஷம் ஆனதுக்கப்புறமும், தீபாவளினா அம்மாச்சி வீடுதான். சின்ன வயசுல, முந்தின நாளே மாமாகூட கிளம்பிடுவோம். ஹாஸ்டல்ல இருந்து சின்ன மாமாவும் வந்துடும். அன்னிக்கு ராத்திரி மாமா பிரண்ட்ஸ் எல்லாரும் வந்துடுவாங்க. ராஜ்மோகன் அண்ணா, ரவி அண்ணா, செந்தில் அண்ணா, கோபால் அண்ணா, எல்லாரும் சேர்ந்து சீட்டு விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. ராத்திரி எவ்ளோ நேரம் போகும்னு தெரியாது. ஆனா நடுவுல ஒரு பிரேக் இருக்கும். அதுதான் எங்க அப்பா வந்துட்டு போற நேரம். 
அப்பாவுக்கு சீட்டு விளையாடுறது எல்லாம் பிடிக்காது. அப்போ அப்பா செம ஸ்ட்ரிக்ட். வீட்ல எல்லாரும் பயப்படுவோம். அப்பா வந்துட்டு போற வரைக்கும் சீட்டுக்கட்டு இருந்த அடையாளம் கூட இருக்காது. 
மறுநாள் விடியகாலைல அஞ்சு மணிக்கே அம்மாச்சி எழுப்பி விட்டுடுவாங்க. நல்லெண்ணெய்ல என்னென்னமோ போட்டு காய்ச்சி வச்சிருப்பாங்க. அந்த பக்கம், தென்னை மரத்தடில பெரிய காசி அண்டா நெறைய தண்ணி காஞ்சுட்டு இருக்கும். அந்த காசி அண்டா மேல எனக்கு ஒரு தனி பாசம். காலி அண்டாவக்கூட தனியா தூக்குறது கொஞ்சம் கஷ்டம். 
குளிச்சு முடிச்சுட்டு ஒரு ரவுண்டு பட்டாசு வெடிக்கும். எனக்கு பட்டாசு வைக்க பயம்னு, ஒரு பெரிய குச்சில முன்னாடி துணிய சுத்தி அத மண்ணெண்ணெய்ல நனைச்சு பத்த வெச்சு தருவாங்க, நான் கேட்டுக்கு இந்தபக்கதுல இருந்தே பட்டாசு பத்தவைப்பேன். 
அதுக்கப்புறம் நல்லா கோழி அடிச்சு விறகடுப்புல குழம்பு வைப்பாங்க. எனக்கும் என் பெரிய மாமாவுக்கும் தீபாவளி கோழிக்கொழம்பு விறகடுப்புல வெச்சு சாபிட்டாத்தான் தீபாவளி. 
இந்த பதிவு தீபாவளிய பத்தியான்னு சொல்லத்தெரியல ஆனா கண்டிப்பா எங்க அம்மாச்சிய பத்தினது.
அம்மாச்சி தாத்தாகூட இருக்கும்போது, ஏதாவது காரணத்துக்காக அமைதியா இருந்தா, ரெண்டுபேரும் மாத்தி மாத்தி வந்து ஒரு பத்துநிமிஷம் பக்கத்துல அமைதியா உட்காந்திருந்துட்டு போவாங்க. நானா எதாவது சொல்றனானு பார்க்க. 
 எல்லாருக்கும் அவங்கவங்க அம்மா சாப்பாடுதான் அமிர்தம். ஆனா எங்க குடும்பத்துல, எங்க அப்பா உட்பட, எங்க அம்மாச்சி சமையலுக்கு அப்புறம் தான் அம்மா. என் தம்பி சொல்லுவான், என்னமோ பண்ணுவாங்க, என்னத்தையோ அரைச்சு ஊத்துவாங்க, ஆனா டேஸ்டா இருக்கும்னு. சமையல்னு இல்ல, வேலை செய்யுரதுல இருந்து, குழந்தைங்கள பாத்துகுரதுல இருந்து எல்லாத்துலையும் அம்மாச்சி தான். 
அம்மாசியும் தாத்தாவும் அமெரிக்காவில் 

நான் பாடுற அம்மாச்சி புராணத்த கேட்டு கேட்டு அம்மாசிக்கு நெறைய பேர் ரசிகர்கள். என் சத்தீஸ்கர், பெங்காலி, ஸ்பானிய பிரண்ட்ஸ் எல்லாருக்கும், என் அம்மாச்சி "அம்மாச்சிதான்". 
ஆறு வருஷமா வெளிநாட்டுல தான் தீபாவளி. என்னதான் எல்லாம் பழகிப்போய் இருந்தாலும், தீபாவளி அன்னிக்கு மனசு அம்மாச்சிக்காகவும், அந்த காசி அண்டாவுக்காகவும் ரொம்ப ஏங்கும். இந்த வருஷம், என்னோட சேர்ந்தும் அண்டாவும் அம்மாச்சிக்காக ஏங்கும். அம்மாச்சியும் தாத்தாவும், இந்த வருஷம் சின்ன மாமா குடும்பத்தோட அமெரிக்காவுல தீபாவளி கொண்டடுறாங்க. 
இதெல்லாம் எல்லார்த்துக்கும் நடந்திருக்கும், எல்லாரும் அனுபவிச்சு, அனுபவிச்சிகிட்டு இருப்பிங்க. ஒன்னும் புதுசில்லை. ஆனாலும், என் அம்மாச்சிய பத்தி எழுதுறதுல எனக்கு மறுபடியும் அஞ்சாவது படிக்குற யமுனாவா மாறின சந்தோஷம். பல சமயங்கள்ல, நடக்குற எல்லா விஷயத்தையும் எழுதனும்னு தோணும். எல்லாத்தையும் பதிவாக்கனும்னு மனசு ஒரு பக்கம் ரெக்கார்டு பண்ணிகிட்டே இருக்கும். யாருக்காக பதிவு செய்யுறேன், என்ன எழுதுறேன், யார் படிப்பாங்கன்னு எல்லாம் இல்ல. எழுதிட்டா போதும். எல்லா மனுஷங்களுமே எவ்ளோ வயசானாலும் அவங்க அம்மாக்கு குழந்தைதான். ஆனா அந்த குழந்தைத்தனத்த அம்மாச்சி/பாட்டி தாத்தாகூட இருக்கும் போதுதான் உணர முடியும். 


Tuesday, January 7, 2014

பொங்கலோ பொங்கல்

இப்படி அப்படின்னு இதோ பத்து நாள்ல பொங்கல். எங்கேயோ வெளிநாட்டுல உட்கார்ந்துகிட்டு இருந்தாலும், பொங்கல் நெருங்க நெருங்க தனியா ஒரு பாரம் மனசுக்குள்ள அழுத்த ஆரம்பிச்சுடும். ஹாஸ்டல்ல தங்கிப்படிச்சப்ப கூட, லீவுல ஊருக்கு போகமுடியும். இங்க இருந்துகிட்டு பொங்கலப் பத்தி நினைச்சுதான் பார்க்க முடியும். எங்க வீட்டு பொங்கல்... 
புது வருஷம் பொறக்குதோ இல்லியோ.. எங்க அம்மாச்சி வீடு சுத்தம் பண்ண ஆள் அனுப்பிடும். தைப்பொங்கல் வருதுங்கிற சந்தோசம் இருந்தாலும் வீட்டுல கூடமாட வேலை செய்யணுமேன்னு அலுப்பா இருக்கும்.. போகிக்கு காப்பு கட்டுறதுல ஆரம்பிச்சு மூணாம் நாள் கறி சோறு  சாபிடுற வரைக்கும் பாட புத்தகத்துக்கெல்லாம் டாட்டா பை பை தான்.
போகிக்கு காப்பு கட்டுன பிறகு அம்மா வாசல் வழிக்க ஆரம்பிச்சுடும். அரிசி மாவுக்கோலம் போட்டு செம்மண் கரைகட்டி.. வீடே அம்சமா இருக்கும்.விடியக்காலைல நீ கோலம் போடுற வரை காத்திருந்தா பொங்கல் முடிஞ்சு கரிநாள் வந்துடும்னு சொல்லி, முந்தின ராத்திரி பதினோரு பன்னெண்டு மணிக்கு ஆரம்பிக்கும் கோலம் போடுற படலம். கோலம் போட்டு கலர் போடி தூவி பொங்கல் நல்வாழ்த்துக்கள் -னு  எழுதுற நேரத்துல ஒரு கும்பல் வரும். பக்கத்து தெருவுல கோலம் போட்டு முடிச்ச கும்பல் தான் ரவுண்ட்ஸ் வருவாங்க, ஒவ்வொரு கோலத்துக்கா மார்க் போட்டுக்கிட்டு. 
கிராமத்துல பொங்கல் கொண்டாடுற வரை.. மண்வாசம் மணக்க மணக்க பொங்கல் கொண்டாடுவோம். டவுன்ல பொங்கல் கொண்டாட ஆரம்பிச்சதுக்கப்புறமும் ஏனோ குக்கர் பொங்கலுக்கு எப்போதுமே தடா தான். ரோட்டுல கல்ல வச்சு எங்க அம்மாவுக்கு வந்த பொங்கச்சீர் பானைல பொங்கல் வைக்குற சுகமே தனிதான். வெண் பொங்கல் சோறும் சீரக மிளகு ரசமும் தலை வாழை இலைல வழியவிட்டு சாப்பிடுறது இருக்கே அட அட... 
ஊர்ல இருக்கும்போது தைப்போங்கல்னு பேருக்கு ஒன்னு வெச்சிட்டு, மறுநாள் மாட்டுப்பொங்கலன்னிக்கு தான் திருவிழா மாதிரி நடக்கும். மாடு கண்ணு எல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு பெயிண்ட் அடிச்சு, அலங்காரம் பண்ணி, மாட்டுக்கொட்டாய்ல பொங்கல் வைப்போம். 

இப்போ எல்லாம், முதல் நாள்  பொங்கல் நல்லா வெச்சிட்டு, மறுநாள் மாடு கண்ணு இல்லாட்டி என்ன, வீட்டுல ஒரு வானரப் படை இருக்கே, அதுக்காவது வைப்போம்னு, எங்க அம்மாச்சி பொங்கல் வைக்கும். அம்மாச்சி வீட்டுத் தெருவுல இருக்குற ஆடு மாடு வெச்சிருக்க யாரோ ஒருத்தர் பொங்கல் வைக்க கூப்பிடுவாங்க. அடுத்த வீட்டுப் பொங்கல் சுவையே அலாதிதான். அன்னிக்கு ராத்திரி ஊர் மந்தைல திரை கட்டி படம் போடுவாங்க. 
வெளில என்ன நடந்தாலும் வீட்டுக்குள்ள டி.வி முன்னாடி கட்டிப்போட்ட மாதிரி உட்கார்ந்திருக்க இந்த காலத்துலயும், கரி நாள் அன்னிக்கு ஒருத்தரையும் வீட்டுக்குள்ள பார்க்க முடியாது. ஊர் மந்தைல தான் சிறுசு பெருசுன்னு அத்தன பேரும் கூடி இருப்பாங்க. ஊருக்குள்ள இருக்க இளவட்ட கூட்டம் ஒன்னு விளையாட்டு போட்டியெல்லாம் நடத்தும். காலைல எட்டு மணில இருந்து ராத்திரி பதினோரு மணி வரைக்கும் ஓயாம மைக் செட்டு அலறும். மதியம் கறிச்சோறு தின்னுட்டு தூங்குனது போதும் மந்தைக்கு வாங்கப்பா-னு எல்லாம் மைக்ல அழைப்பு வரும். விளையாட்டு போட்டி எல்லாம் பார்க்க ஒரு கூட்டம், கலந்துக்க ஒரு கூட்டம், வர பொண்ணுங்கள சைட் அடிக்க ஒரு கூட்டம்னு, மந்தைல இருக்க புள்ளையார் கோயில் வாசல்ல பெரிய கூட்டமே கூடிடும். கோலப் போட்டி, ஓட்டப்பந்தயம், ஸ்லோ சைக்கிள் ரேஸ், பானை உடைத்தல்னு விளையாட்டெல்லாம் சாயங்காலம் அஞ்சு மணிவரை நடக்கும். பானைய உடைச்சு பரிசாக் குடுக்குற அண்டாவ வீட்டுக்கு கொண்டாராட்டி சோறு இல்லடி உனக்குன்னு பையன பார்த்து பாட்டி ஒருத்தங்க கத்திட்டு போவாங்க. அது என்ன மாயமோ மந்திரமோ, வருஷா வருஷம் அந்த அண்ணன் தான் பானைய உடைப்பாரு. வீட்ல சோறாக்கிட்டு இருக்குறவங்க கூட எல்லாத்தையும் விட்டுட்டு பானை உடைக்குறத பார்க்க வருவாங்க. அப்புறமென்ன, ஆட்டம் பாட்டு, நாடகம்னு கலை களைகட்டும். அந்த வருஷம் வந்த பிரபலமான குத்துப் பாட்டை இனி கேட்கும் போதெல்லாம் காதைப்பொத்தும் அளவுக்கு பாட்டுப் போட்டி டான்ஸ் போட்டி எல்லாத்துலயும் குட்டிப்  பசங்க தேச்சு எடுத்துடுவாங்க. இடையிடைல அறிவுக்கும் வேலை குடுப்பாங்க. பொது அறிவுக்கேள்வி கேட்டு பதில் சொல்றவங்களுக்கு சொம்பு டம்ளர்னு குடுப்பாங்க. 
இது எல்லாம் நடக்கும் போது எங்க அம்மாவுக்கும் எனக்கும் நடுவுல ஒரு நயன பாஷை ஓடும். பொட்டப்புள்ளையா அடக்கமா ஒரு இடத்துல இரு.. அங்கயும் இங்கயும் ஓடாதனு ஒரே கண் உருட்டல்ல மொத்த விஷயத்தையும் புரிய வெச்சுடுவாங்க. இன்னைக்கு வரைக்கும் இதுல எதுவுமே மாறல, எனக்கு தெரிஞ்சு இருபத்தி அஞ்சு வருஷமா. அப்போ போட்டி நடத்துன இளவட்டங்கள் இப்போ பரிசு குடுக்குற சிறப்பு விருந்தினர்களா மாறி இருக்காங்க. எங்க தாத்தா  மாமா  உட்பட. இன்னைக்கு வரைக்கும் எங்க அம்மாச்சி காசை இடுப்புல முடிஞ்சுகிட்டு எதோ ஒரு பேரனுக்கு குச்சி ஐஸ் வாங்கிக்குடுத்துகிட்டு தான் இருக்கு. அம்மா பொண்ணுக்கு நடுவுல நடக்குற அந்த நாடகம் கூட இன்னமும் நடக்குது. பாத்திரங்கள் மட்டும் என் மாமன் மகளும் அத்தையுமா. கரிநாள் அன்னைக்கு போன் பண்ணினா எங்க அத்தை கழுதைங்க ரெண்டும் மந்தைலதான் இருக்குனு சொல்றத கேட்கலாம். 
எதுவுமே மாறல ..நாலு வருஷமா மூத்த வானரம் வீட்ல இல்லாம பொங்கல் வைக்கும் போது அம்மாவும் அம்மாச்சியும் கொஞ்சமே கொஞ்சமாய் வருந்துவதாக மட்டும் கேள்வி :)

Monday, June 20, 2011

சத்ய சாய்பாபாவின் அறையில் தொண்ணூற்றி எட்டு கிலோ தங்கமும் பன்னிரண்டு கோடி ரூபாய் பணமும்...


சாய்பாபாவைக் குறை சொல்லி ஒன்னும் பண்ண முடியாது..
நம்ம மக்களுக்கு மட்டும் ஏன்தான் இப்படி புத்தி குறுக்க பாயுதோ தெரியல. இருக்குற கோடானகோடி கடவுளெல்லாம் பத்தலை.. இதுல இந்த மாதிரி போலியா வேஷம் போட்டு சம்பாதிக்கிறவங்களையும் கடவுளா பார்த்து என்னத்த கண்டாங்களோ தெரியல.. வேற எந்த மதத்துலயும் இத்தனைக் கடவுள்கள் இல்ல. படைக்க, காக்க, அழிக்க, இந்த மெயின் கடவுள்களுக்கு பூ தூவ, வெயிலடிக்க, மழை வர, காத்தடிக்க... அப்பப்பா.. இதுல.. இந்த கடவுள்களுக்கும் மக்களுக்கும் இடையே இடைத்தரகர்களாய் நாலு காவி வேடதாரிகள்... இந்த மாதிரி சாமியார்களோட பக்தர்கள் லிஸ்ட எடுத்து பாருங்க... கோடி கோடியா பினாமி பேர்ல பணம் சேர்த்து வெச்சிருக்குற பெரிய மனுஷன், பித்தலாட்டக்காரன், அரசியல்வாதி..... ஒழுங்கா உழைப்பு மேல நம்பிக்கை வெச்ச எவனும் எட்டி கூட பார்க்க மாட்டான்.. எல்லா பாவமும் செஞ்சுட்டு இப்படி சாமியார்கிட்ட போய் பாவ மன்னிப்பு கேட்கிறாங்களா?? மனுஷன் தப்பு செய்யக்கூடாது, ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது. கடவுள் ஒருத்தர உருவகப்படுத்தி அந்த நம்பிக்கைய இந்த முட்டாள் மனுஷங்களுக்கு குடுத்தா மனிதகுலம் சிறந்து விளங்கும் (!!!) அப்படின்ற எண்ணத்துல கடவுள்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம். ஆனா நம்ம மக்கள் எப்படி தெரியுமா... ??'செய்யுற தப்பெல்லாம் செஞ்சுகிட்டு போலிஸ் காரங்களுக்கு மாமூல் குடுக்குற மாதிரி கடவுளுக்கும் குடுத்துட்டா, சாமி கண்ண குத்தாதுனு கடவுளையும் ஏமாத்திட்டு இருக்காங்க.. சரி.. சாமி கல்லா தான இருக்கு.. சாமி பேர சொல்லி நாமளும் வசூலிக்கலாம்னு ஒரு கும்பல் காவி வேஷ்டிய கட்டிக்கிட்டு கிளம்பிருது.. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு நம்ம மக்கள் சொன்னா என் எச்சிலிலும் இருப்பார்னு வாய்ல இருந்து லிங்கம் எடுத்து காமிக்கிறாங்க.. இதுல இந்த சாய் பாபா வெள்ளில தங்க வேலைப்பாடு செஞ்ச கட்டில்ல தான் தூங்குவாராம்... தங்க சிம்மாசனத்தில தான் உட்காருவாராம்.. என்ன கொடுமை சார் இது?? நம்ம நாட்டுல ஏதோ சி பி ஐ, வருமான வரித்துறை, சுப்ரீம் கோர்ட்னு எல்லாம் ஏதோ இருக்குதாமே.. அவங்க கண்ணுக்கெல்லாம் இந்த மாதிரி மடங்கல்ல இருக்கும் வெள்ளி தங்கமெல்லாம் துருபுடிச்ச இரும்பா தெரியுமோ?? அது சரி நாட்டை ஆளுற பிரதமரும் ஆட்டி வைக்குற தலைமையும் இந்த மாதிரி போலிகள் காலுல போய் விழும் பொது சி பி ஐ மட்டும் என்ன பண்ணும்.. அப்புறம் நம்ம வருமான வரித் துறைக்கு நேர்மையா உழைச்சு சம்பாதிக்கிறவன கண்டாதான் மூக்கு மேல வேர்க்கும்..
பெரியார் மாதிரி ஆளுங்க பகுத்தறிவு ஊட்டினா அந்த ஆளு கடவுளை நம்பாதனு சொல்றான் அப்படின்னு ஏசிப் பேசத்தான் தெரியும்.. இவங்க செய்யுற தப்புகளுக்கு, இவங்களோட இயலாமைக்கு எல்லாத்துக்கும் மொத்தமா குற்றம் சுமத்தப்பட ஏதோ ஒன்று வேண்டும்.. அந்த ஏதோ ஒன்று தான் கடவுள்.. ஏன்னா கடவுள் அப்படின்ற ஒருத்தர் நேர்ல வந்து கேள்வி கேட்க மாட்டார் பாருங்க.. (அப்படின்னு ஒருத்தர் இல்லைன்றது தனியா விவாதிக்கப்பட வேண்டிய சமாச்சாரம் ) அப்புறம், இந்த மாதிரி கடவுளின் பெயரால் பிறப்பெடுத்தவங்களுக்கு காசு மட்டும் தான் சோறு.. அதனால இவங்களும் தட்டி கேட்க மாட்டாங்க.. எல்லாத்தையும் உருவாக்கினது சாமினா, அந்த சாமியே பிறப்பெடுத்து வந்ததா கொண்டாடப்படும் இந்த சாமியார்ங்களுக்கு எதுக்கு இவ்வளவு சொத்து..
நம்ம மக்களின் குருட்டு நம்பிக்கை, கடவுளை குறுக்கு வழியில் அடைய நினைக்கும் குறுக்கு புத்தி, தவறான வழிகாட்டல்கள் இதெல்லாம் இந்த மாதிரி நாடு முழுசும் புரயோடிப்போய்க் கிடக்கும் சாமியார் புழுக்களுக்கு தீனி.. இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் பின்னணியில் இருக்கும் இந்த சாமியார் கூட்டங்களும், மொத்தமாய் இந்தியாவிற்கு பிச்சைக்கார வேஷம் போட்டு உலக நாடுகளுக்கு மத்தியில் காட்சிக்கு வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்..
கடவுள் நம்பிக்கை முற்றிலும் தவறு என்று நான் கூறவரவில்லை.. கடவுள் என்பது அவரவர்களின் புரிதலுக்கு உட்பட்டது..
மக்களே.. குறிப்பாக இன்றைய தலைமுறையினரே.. நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களைக் கண்டும் அநியாயங்களைக் கண்டும் நீங்கள் அமைதியாய் இருப்பது மட்டுமல்ல, இந்த மாதிரி ஆன்மீகவாதிகளின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கைகளும் நம்மை மீண்டும் அடிமைத்தளைகளுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பதை மறவாதீர்!! கொஞ்சமேனும் பகுத்து அறிந்து பாருங்கள்...

Tuesday, March 30, 2010

பெண்களுக்கு எதிராய்...........

சமூக அவலங்களுள் மிகவும் முக்கியமானவை பெண்களுக்கு எதிரான கொடுமைகளே.. வன்முறை மட்டும் இன்றி என்னைப் போல் பல இளம் பெண்கள்... எப்படியும் 80 சதவிகிதம் பெண்கள்.. நான் அனுபவித்ததை அவர்களும் அனுபவித்திருப்பார்கள்...
இன்று எங்கள் ஊரில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். மூன்று பேர் அமரும் இருக்கையில் நடைபாதை ஓரமாக நான் அமர்ந்திருந்தேன். பேருந்தில் கொஞ்சமாக கூட்டம் இருந்ததால் எப்படியும் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் அருகில் வந்து நின்றார். முன்தலை கொஞ்சம் சொட்டை விழுந்து, முடி நரைத்து போய் இருந்தார். பேண்டும் சர்ட்டும் போட்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது அவரின் உள்நோக்கம். மெதுவாய் சீண்டுவதற்கு ஆரம்பித்தார். பிறகு கேட்கவா வேண்டும். அசிங்கமாய் திட்ட தோன்றினாலும், அடக்கமாய் " என்ன சார் பண்றீங்க, அசிங்கமா இல்ல உங்களுக்கே??? இதுக்குத்தான் வரிங்களா?? அந்த பக்கம் நகர்ந்துபோய் நில்லுங்க" என்று மட்டும் குரலை உயர்த்திக் கூறினேன். அதற்க்கு அந்த ஆள் அமைதியாக சாரி என்று சாதாரணமாக சொல்லிவிட்டு நின்றுகொண்டான். எனக்கு பற்றிக்கொண்டு வந்ததே பாருங்கள். பொண்ணுங்க எங்கயாவது இருந்தா போதுமே உரசுரதுக்கே அலையுரிங்க என்று கத்தியவுடன் தான் தள்ளி நின்றான்.


இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன், பேருந்தில் செல்லும் பெண்களெல்லாம் பப்ளிக் ப்ராபர்டியா???? இந்த மாதிரி ஈனப்பிறவிகள் வந்து உரசி விட்டு சாரி என்று சொல்லிவிட்டு செல்வதற்கு??? இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், நான் சத்தம் போட்டும் அருகில் இருந்தவர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த சமூகம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது??? அவர்கள் வீட்டுப்பிள்ளைஎன்றால் ஒரு வேலை ஆதரவிற்கு வந்திருப்பார்களோ??? அந்தப் பேருந்தின் நடத்துனர் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஏதோ நான் செய்தது தவறு என்ற எண்ணம் எனக்கே உண்டாகுமாறு செய்துவிடுவார்கள் போலிருந்தது. இப்படிப்பட்ட பார்வையாளர்கள் இருப்பதால் தான் பல பெண்கள் வாயைத்திறந்து இந்த கொடுமைகள் பற்றி பேசுவதில்லை.
பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் இந்த வகையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய இளசுகள் பொறுக்கித்தனமாய் நடந்துகொள்வதாகப் பல பெருசுகள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் பல தலை நரைத்த ஆசாமிகள் தான் இப்படிக் கீழ்த்தரமாய் நடந்து கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆண்கள் எப்படி ஒரு பெண்ணுக்கு நல்ல கணவனாகவோ, நல்ல தந்தையாகவோ, இல்லை நல்ல தமையனாகவோ இருக்க முடியும்??? அதுவும் நான் சந்தித்த இந்த ஆளுக்கு என் தந்தையின் வயதிருக்கும். என்னால் இன்னும் கூச்சலிட்டு போலீசில் அந்த ஆளைப் பிடித்துக்கொடுத்திருக்க முடியும். அப்படி செய்தால், அவருக்கு ஒரு பெண் இருப்பின் அவள் எந்த அளவுக்கு கூனிக் குறுகிப் போவாள் என்பதை என்னால் உணர முடிந்தது.

அந்த ஆள் கூறிய சாரி கூட தான் செய்ததது தவறு என்று உணர்ந்து கூறிய வார்த்தையில்லை. இதையே வேலையாய் கொண்டிருக்கும் இவனைப்போல கேடுகெட்டவர்கள் இருக்கும் வரையில் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் சிறிதளவேனும் இல்லாமல் போகப்போவதில்லை. நண்பர் ஒருவர் முன்பு தான் பதிவில் கூறியது போல் " travelling alone is a nightmare for many girls because of these kinds of men".

இவ்வாறு நடந்துகொள்ளும் ஆண்கள் தங்களின் ஒரு நிமிட அல்ப ஆசைக்காக தங்கள் மனைவி மக்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
என்று மாறும் இந்த சமூகம். என்று குறையும் இப்படிப்பட்ட அடக்குமுறைகளும் அசிங்கங்களும்??? யோசிப்பார்களா வெற்றுப்பார்வையாளர்கள்???

Thursday, August 20, 2009

கருக்குலைந்த நிலையில் இயற்கை வளங்கள்

சமீபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நம் தோழியருள் ஒருவர் காவிரிஆற்றைப்பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததிலிருந்தே இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்ற ஆவல் உந்திக்கொண்டே இருந்தது. என் மனக்குமுறல்களை அவருடைய பதிவில்கூட பின்னுரையாய் எழுதியிருப்பேன்.
காவிரி ஆற்றின் வளமையும் அதைச் சார்ந்த டெல்டா மாவட்டங்களின் செழுமையும் நாம் அறிந்ததே.. ஆனால் அவற்றின் இப்போதைய நிலை??? மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். எங்கள் ஊரிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த சோலை போல் மரங்கள் நெடிது வளர்ந்திருக்கும். ஒரு பக்கம் காவிரியாறும் மறுப்பக்கம் வாய்க்கால்க்களுமாய் பச்சைப்பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்.


ஆனால் இப்போது அத்தனை மரங்களும் நெடுஞ்சாலைத்துறையினரால் வேரோடு அழிக்கப்பட்டு சாலைப் புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் அந்த சாலையில் போகும்போது சொல்லொண்ணாத் துயரம் நெஞ்சை அடைக்கிறது. நெடுஞ்சாலைத்துறையில் இந்த மரங்களை அழித்ததுக்கு பரிகாரமாக சாலைக்கு நடுவே காகிதப்பூச்செடி நட்டு செல்வார்கள். கவனிக்கவும். செடி நடுவது மட்டுமே அவர்கள் செய்வது. பராமரிப்பைப் பற்றி நாம் கேட்கக்கூடாது. இங்கே டார்வினின் சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட் கோட்பாடுதான் ஜெயிக்கும்.
சாலையோர மரங்களின் கதி இதுவென்றால் காவிரியின் நிலைமை கேட்கவே வேண்டாம். ஆற்றுக்கு நடுவில் ரோடு போட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கில் லாரிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. காவிரித்தாயின் கருவை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி காவிரியின் இரு கரைகளையும் இணைக்கும் வண்ணம் ஆங்காங்கே பாலங்கள் வேறு. ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடினாலும் புழங்குவதற்கு ஆபத்துகள் அதிகம். மணல் அள்ளவும், பாலம் கட்டவும் ஏற்படுத்தப்பட்ட குழிகள் ஜல சமாதிகளாக மாறும் வாய்ப்பு அதிகம். சாயப்பட்டறைக் கழிவுகள் அத்தனையும் காவிரியோடு கலந்து கறையாக்கிகொண்டிருக்கின்றன. இவை எல்லாமுமாய் சேர்ந்து காவிரி கருக்குலைந்து போய்க்கிடக்கிறாள்.
மேலும் எல்லா இடங்களிலும் பெரிய பெரிய அபார்டுமேன்ட்களைக் கட்டுவதால் நிலத்தடி நீர் காணாத தூரம் போய்விட்டது. எங்கும் ஓரடி மண்ணைப் பார்க்க முடியவில்லை. இப்படி இருந்தால் எப்படி நிலத்துக்குள் தண்ணீர் இறங்கும். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்??? அதிகரிக்க வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்து இன்னும் கீழே போகாமல் இருந்தால் போதுமே. விளை நிலங்கள் அத்தனையும் விலைபோய்விட்டன. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் கொள்கைகளெல்லாம் காற்றில் பறந்து விட்டது. காற்றுகூட இன்று விஷமாகிக்கொண்டு வருகிறது. பிற விஷயங்களில் சரித்திரம் திரும்பும் எனக் காத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் திரும்பப்பெறமுடியாத வளங்களின் கதி???
நான் இங்கே கூறியிருப்பது ஒரு சில விஷயங்களை மட்டும்தான். என்னைச் சுற்றி எனக்கருகே நடக்கும் சிலவற்றைப் பற்றி மட்டும். (ஏதோ எனக்கு தோன்றியவற்றைப் பதிவு செய்துள்ளேன்). இப்படி அவரவர் தனக்கருகே நடப்பவற்றை கவனித்தால் கூட போதுமே.
நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பார்த்து எத்தனையோ நாடுகள் பொறாமைப்படுகின்றன. ஆனால் நாம் அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தன் வரையில் என்ன செய்யமுடியுமோ, எதை செய்யாமல் தடுக்க முடியுமோ அவற்றை மட்டும் செயல்படுத்தினால் கூட நாட்டு வளம் காக்கப்படும்.
நாட்டின் முன்னேற்றம் அத்தியாவசியமானது. ஆனால் அந்த முன்னேற்றம் நாட்டின் முக்கிய கருவான இயற்கை வளங்களைக் கருக்கிய சாம்பல்களின் மேல் அல்ல. கவனிக்குமா சம்பந்தப்பட்ட துறை?? கவனிப்பார்களா மக்கள்???
வாருங்கள் பேசுவோம்...

Tuesday, August 18, 2009

பாஸ்போர்ட் இருநூறு ரூபாய்.. சான்றிதழ் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்

என் முதல் பதிவே இன்று நாட்டில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் பற்றியதாய் அமைந்துவிட்டது.


என் பக்கத்து வீட்டு பெண் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தார்.. சில தினங்களுக்கு முன் வெரிபிகேசனுகாக எங்கள் ஊர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபில் வந்தார்.. அது சமயம் என் பக்கத்து வீட்டில் அந்த தோழியைத் தவிர வேறு யாரும் இல்லை... அந்த போலீச்காரரோ வந்ததிலிருந்தே மிகவும் அதிகாரத் தோரணையிலேயே பேசியிருக்கிறார்... அது கூட பரவாயில்லை.. வெரிபிகேசனுகாக இப்போது என்னிடம் இருநூறு ருபாய் குடுக்கவேண்டும் அப்புறம் ஸ்டேசனுக்கு போய் ஏட்டு ஐயாவை பார்த்து கையெழுத்து போட்டு விட்டு அவரிடம் முந்நூறு ருபாய் குடுத்துடு என்று அதிகாரமாய் கேட்டிருக்கிறார்.. இந்த பெண்ணோ என்னிடம் இப்போது பணம் இல்லை, வீட்டிலும் யாரும் இல்லை, அதனால் ஸ்டேசனுக்கு வரும்போதும் தருகிறேன் என்று கூறியுள்ளார்.. அதற்கு அவரோ "பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கி குடு.. நீ ஸ்டேசனுக்கு வரும்போது நீ வருவ வருவன்னு நான் பார்த்துகிட்டா உட்கார்ந்திருக்க முடியும்... இப்போ நீ குடுக்கலைனா இந்த அட்ரசில நீ இல்லைன்னு சொல்லித் திருப்பி அனுப்பிடுவோம்.. அப்புறம் பாஸ்போர்ட் ஆபீசுக்கு நீ திரும்பவும் அலையனும்.. இருநூறு ரூபாய்க்காக பாக்காத... வேலை முடியனுமில்ல" என்று மிரட்டி இருக்கிறார்... இவரும் வேறு வழியின்றி என்னிடம் பணம் வாங்கி கொடுத்தனுப்பி விட்டார். அப்போது நானும் வீட்டில் தனியாகத்தான் இருந்தேன். பெரியவர்கள் யாரேனும் இருந்திருந்தால் கூட அவரை கேள்வி கேட்டிருப்பார்கள். எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. இன்னும் முந்நூறு ரூபாய் அழவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஸ்டேசனுக்கு சென்றார் அந்த தோழி. ஆனால் பிறகுத்தான் தெரிந்தது இந்த கான்ஸ்டபில் கொள்ளைக்கும் ஏட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று. அந்த ஸ்டேசனில் ஏட்டு TVS-50 ல் வருவார். நம்ம கான்ஸ்டபில் splendor ல் ஊருக்குள் வலம் வருவார்.
லஞ்சம் குடுக்கக்கூடாது என்ற எண்ணம் மனதிலிருந்தாலும் இந்த மாதிரி மிரட்டல்களுக்காகவும் நம் வேலை நடக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த அதிகாரப்பிச்சைக்கு அடங்கித்தானே போகவேண்டி இருக்கிறது. இதைப் பற்றி புகார் செய்யலாம் எனத் தோன்றினாலும் நம் வேலை கெட்டுவிடுமே என பயப்படத்தான் வேண்டி இருக்கிறது. எத்தனையோ பேர் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கிறார்கள். வெறும் வெரிபிகேசனுகாக ஒவ்வொருவரிடம் இருந்தும் இருநூறு ரூபாய் என்றால் அவர் இதுவரையில் எவ்வளவு சம்பாதித்திருப்பார். இது மட்டுமல்ல...


ஒரு நாள் ஒரு டிராபிக் போலிஸ் ஒரு சாலையில் டியூட்டியில் நின்றுகொண்டிருந்தார் . லைசென்ஸ் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய சீருடையோ மிகக்கேவலம். காக்கி கால்சட்டைக்கு பதிலாக கொஞ்சம் வேறு கலரில் கால்சட்டையும், காலில் பூட்சுக்கு பதிலாக செருப்பும் அணிந்திருந்தார். மூத்த அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு தானே இது? மக்களின் மத்தியில் காவல் துறையினரைப் பற்றிய தவறான எண்ணங்கள் மாறவேண்டும் எனின் இந்த அடிப்படை விஷயங்களிலும் அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். கவனிக்குமா காவல் துறை??? காவல் துறையில் மட்டுமல்ல.. எல்லா துறைகளிலுமே இதுதான் நடக்கிறது. ஒரு OBC சான்றிதழ் தருவதற்காக ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். லைசன்ஸ் வாங்க போனால் என்ன நிலை என்று எல்லோரும் அறிந்ததே.. பேசி மட்டும் என்ன மாறப்போகிறது என்கிறீர்களா??? ஏதோ இப்படி பேசியாவது என் ஆதங்கத்தை உங்களிடம் சொல்லலாம் என்றுதான். வாருங்கள் பேசுவோம் இதைப்பற்றி..

பேசுவோம்


சில செய்திகளையோ இல்லை நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையோ பகிர்ந்துகொள்ளவே இந்த பக்கம்.. சில விஷயங்களில் மற்றவர்களுடைய கருத்துக்கள் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆசை... வாருங்கள்பேசுவோம்...